என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திரபாபு"
- குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார்.
- இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.
சென்னை:
சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன.
இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நூலகத்துக்கு ஐதராபாத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அகர்சனா 1000 புத்தகங்களை வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மாணவியின் தந்தை சதீஷ், அகர்சனாவின் இந்த செயலை பாராட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இதுபோன்று குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவர்களின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
நொளம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
- டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார்.
ஈரோடு:
ஈரோடு, கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை ரெயில் மூலம் ஈரோடு வந்தார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் வரவேற்றனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கினார். பெருந்துறை பகுதியில் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், மெய்யழகன், செந்தில்குமார் ஆகியோரையும், கருங்கல்பாளையம் பகுதியில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அதில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
பின்னர் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்து செல்லும்.
அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல் துறைக்கு வந்துள்ளது.
குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, பாதுகாப்புக்காக போலீசார் ஒருவர் உடன் செல்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார். தற்போது டி.ஜி.பி.யாக பணி உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறார். அவர் இன்று கோபிசெட்டி பாளையத்துக்கு வந்தார். பின்னர் தான் பணியாற்றிய அலுவல கத்துக்கு சென்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். இதைத்தொடர்ந்து கோபி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து போலீசாரிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
- தற்போதைய நிலவரப்படி முதல் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.
- வருகிற 28-ந்தேதி தமிழக டி.ஜி.பி. யார் என்று அறிவிக்கப்படும்.
சென்னை:
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
புதிய டி.ஜி.பி.க்கான போட்டியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் முன்னாள் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார், தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் உள்பட 10 பேர் உள்ளனர். டெல்லியில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இவர்களில் 3 பேர் இறுதி செய்யப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழக டி.ஜி.பி. பதவிக்கு சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சஞ்சய் அரோரா ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி முதல் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.
சைலேந்திர பாபுவுக்கு வருகிற 30-ந்தேதி பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகும். எனவே வருகிற 28-ந்தேதி தமிழக டி.ஜி.பி. யார் என்று அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். இந்த ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உயிர் பலிக்கு காரணம் கள்ளச்சாராயம் இல்லை. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த சாராய வியாபாரி அமரன் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், முத்து என்பவரிடம் வாங்கி உள்ளார். முத்து புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.
சித்தாமூர், பெருக்கரணை, பேரம்பாக்கம் பகுதியில் விஷச்சாராயத்தை விற்பனை செய்த அமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாராயத்தை அருந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இவர், இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த வேலு, அவரது சகோதரர் சந்திரன் ஆகியோரிடம் இருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
வேலு பனையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். அவருக்கு இதனை விளம்பூரை சேர்ந்த விஜி என்பவர் விற்று இருக்கிறார். அவரும் இந்த விஷச்சாராயத்தை புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலையிடம் இருந்து வாங்கி உள்ளார். எனவே சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்தில் இருந்து வந்திருப்பது புலனாகி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 37 ஆயிரத்து 217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதே போல் கள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து விஷசாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எந்த தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தினார்.
- காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸ் நிலையங்களை திடீரென ஆய்வு மேற்கொண்டார். நித்ராவிளை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் ராஜீவை பாராட்டி வெகுமதி வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து பணியில் இருந்த போலீஸாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய சுற்றுப்புறங்களை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதை பார்வையிட்டார். அப்போது போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கொலங்கோடு காவல் நிலையம் சென்று காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு வரவேற்பு புத்தகத்தை ஆய்வு செய்தார்.
அப்போது கோப்புகளை சரியாக பராமரிப்பு செய்ததற்காக கொல்லங்கோடு காவல் நிலைய எழுத்தர் ஜஸ்டின் தேவ அருள்தாஸ்க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார் தொடர்ந்து பட்டாலியன் பிரிவு போலீசாரின் குறைகளையும் கேட்டு அறிந்தார். அவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- வீட்டின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மொட்டை மாடியிலும் 55 பழங்கால கற்சிலைகள் இதில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
- திருக்கோவிலுக்கு சொந்தமான வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உலோக சிலைகள் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டிருந்தது.
சென்னை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலில் சிலர் சந்தேகத்திற்கிடமாக பழங்கால கற்சிலைகளை இடம் மாற்றம் செய்ய தயார் செய்வதாகவும் மேலும் அச்சிலைகள் இந்து கோவில்களில் இருந்து திருடப்பட்டவைகளாக இருக்கலாம் என்று கிடைத்த தகவலின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். வீட்டின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மொட்டை மாடியிலும் 55 பழங்கால கற்சிலைகள் இதில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டம் செந்துறை பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோவிலுக்கு சொந்தமான வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உலோக சிலைகள் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டிருந்தது.
இதில் ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தை அங்குள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்துடன் தொல்லியல்துறை நிபுணர்களின் உதவியோடு ஒப்பீடு செய்து பார்த்தபோது இரண்டு புகைப்படங்களிலும் உள்ள ஆஞ்சநேயர் உலோக சிலையும் ஒன்று தான் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த சிலையும் மீட்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்களுக்கு புத்தகமும், பேனாவும்தான் பாதுகாப்பான ஆயுதங்களாகும்.
- பெண்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை இணையதளங்களில் பகிரக்கூடாது.
சென்னை:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், தற்காப்பு முறைகள், குடும்ப வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சைலேந்திரபாபு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்களுக்கு புத்தகமும், பேனாவும்தான் பாதுகாப்பான ஆயுதங்களாகும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மீதான வழக்குகளில் 90 நாட்களில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆயிரத்து 711 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 11 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வழக்குகளில் குற்றவாளிகள் 5 ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். 219 வழக்குகளில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான தண்டனைகள் பெற்று தரப்பட்டதால்தான், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
பெண்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை இணையதளங்களில் பகிரக்கூடாது. ஒருவேளை அவ்வாறு பகிர்ந்து, அந்த தகவல்களை வைத்து பெண்களை யாரும் மிரட்டினால் உடனே அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க தற்போது 37 மாவட்டங்கள், 9 பெரிய நகரங்களில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கலைச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
- சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
- போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மீனம்பாக்கம்:
சென்னையை அடுத்த மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்த அவர், போலீசாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே' மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள்.
- ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம்.
ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கைவரிசை காட்டுவதால் அவர்களை கண்டுபிடித்து நெருங்குவது என்பது போலீசுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது.
இதனால் `வந்தபின் அலறுவதை விட வரும் முன் காப்பதே மேல்' என்பதற்கிணங்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற் கொண்டு வருகிறார்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள் என்பார்கள். அந்த வகையில் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் புதுப்புது வழிகளில் ஊடுருவி மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.
இதன்படி கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே' மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கி கணக்கில் தூண்டில் போல போட்டு அதன்மூலம் பெரிய தொகையை கறக்கும் மோசடி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி வலை எப்படி விரிக்கப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
கூகுள் பே என்று அழைக்கப்படும் `ஜி பே' மூலமாக பணம் அனுப்புவது என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாததாகவே மாறி இருக்கிறது. இப்படி கூகுள் பே மூலமாக பணம் அனுப்பும் நேரங்களில் சில நேரங்களில் தவறுதலாக நாம் வேறு யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டு திருப்பி கேட்டிருப்போம்.
அதேநேரத்தில் யார் என்றே தெரியாத மற்றவர்களும் நமது வங்கி கணக் குக்கு பணத்தை அனுப்பி விட்டு திருப்பி கேட்டிருப்பார்கள். இந்த நடை முறையை பின்பற்றித்தான் புதிய மோசடி கும்பல் மக்களின் சேமிப்பு பணத்தை களவாட களமிறங்கி உள்ளது.
சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரசாலிகள் போல மோசடி ஆசாமிகள் செயல்படுகிறார்கள். உங்கள் வங்கி கணக்கில் சில ஆயிரங்களை ஜி பே மூலம் அனுப்பி விட்டு உங்கள் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
`எனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு பணம் அனுப்பி உள்ளேன். அது தெரியாமல் உங்களுக்கு வந்துவிட்டது. அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் பிளீஸ்...' என்று கூறுகிறார்கள். இப்போதுதான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இதன் பின்னர் எதிர் முனையில் பேசும் நபர் ஒரு `லிங்'க்கை அனுப்புகிறேன். அதில் போய் எனது பணத்தை அனுப்புங்கள் என்று கூறி குறிப்பிட்ட லிங்கையும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்ததும் ஓ.டி.பி. எண் வரும் அந்த எண்ணை எதிர் முனையில் பேசும் நபர் கேட்பார்.
நீங்கள் ரகசிய குறியீட்டு எண்ணான ஓ.டி.பி.யை சொன்னதும் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த சேமிப்பு தொகையும் காணாமல் போய் இருக்கும். இது போன்ற நூதன மோசடி கடந்த ஒருவாரமாகவே அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி வருகிறேன். உங்கள் வங்கி கணக்கையோ, ரகசிய குறியீட்டு எண்ணையோ வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள்.
இதனை பலமுறை பொது மக்களிடம் எடுத்துக் கூறி உள்ளோம். ஆனால் வங்கி விவரங்களை கொடுத்து பொதுமக்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது கூகுள் பே மூலம் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஏமாற்றி பொதுமக்களின் வங்கி கணக்கை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் உஷாராக இல்லை என்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும்.
தமிழக காவல் துறையில் உள்ள `காவல் உதவி செயலி மற்றும் 1930 எனும் அவசர உதவி எண் ஆகியவற்றின் மூலமாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் செய்தால் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கி கணக்குக்கு பணம் சென்ற 24 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி தொடர்பான தகவலை கேட்டால் இணைப்பை துண்டித்து விடுங்கள். `கூகுள் பே'யில் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று யாராவது போனில் தெரிவித்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி விவரத்தை தெரிவியுங்கள். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தெரியாமல் பணத்தை அனுப்பி இருந்தால் நிச்சயம் நேரில் வருவார்.
அப்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். இதுபோன்று உஷாராக செயல்பட்டு பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
- வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.
- அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர், போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
- தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம்.
சென்னை:
வட மாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.
* வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
* வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை.
* வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம்.
* வதந்தி தொடர்பாக வட மாநில டி.ஜி.பி.க்களுடனும் பேசியுள்ளேன். பீகார் குழு ஆய்வு செய்யும்போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும்.
* வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
- பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.
சென்னை:
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தமிழக காவல்துறை அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்